அசைவு...

-ஏங்க? கெளம்பறப்போ பையன்கிட்டச் சொல்லிட்டுப் போங்க...

என்ற மனைவியை முறைத்தேன்...நான் என்ன சொல்வேன் என்று

அவளுக்குத் தெரியும்.


-சும்மா முறைக்காதீங்க...வர்றதுக்குப் பத்துநாள் ஆகும்ல.

ஒரு வார்த்த சொல்லிட்டுப் போனா என்னவாம்?


-என்னால முடியாது... நீதான் இருக்கல்ல. நீயே சொல்லிரு

முகத்தைக் கொஞ்சம் கடுமையாக வைத்துக்கொண்டே சொன்னேன்.கிட்டத்தட்ட அவளுக்கு தலையில் அடித்துக்கொள்ளாதக் குறைதான்.


-என்னமோ பண்ணித்தொலைங்க...பதினாறு வயசுப் பையங்கிட்ட

அப்படி என்னதான் வீராப்போ... வயசாக வயசாக பொறுப்பு வரணும்.

இங்க என்னடானா வெடலப் பசங்களுக்குச் சமமா தகப்பனே முறுக்கிட்டுத் திரியுது.

பாக்கறேன்.இதெல்லாம் எத்தன நாளைக்குன்னு...


மனைவி வெடித்துக்கொண்டிருந்ததைப் பொருட்படுத்தாமல்

துணிகள் வைத்திருந்த பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு


-சரி சரி...போறப்போ பொலம்பாத...நான் கெளம்பறேன்.

அவன் வந்தா சொல்லிடு.

என்று வாசல் நோக்கி நடந்தேன்.


- நல்லா போய்ட்டு வாங்க. நான் எதுக்கு அவங்கிட்டச் சொல்றேன்?

ஒரு போன் போட்டு இவரு சொல்லமாட்டாராம்.

உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நானென்ன வக்கீலாவா

வந்து சேந்துருக்கேன்.


பாதையில் இறங்கி நடந்துகொண்டிருந்த போதும் மனைவியின்

குரல் என்னைத் துளைத்துக்கொண்டுதான் இருந்தது.

அவள் சொல்வதும் உண்மைதான்.

பதினாறு வயதுப் பையனிடம் இந்த அளவு வீராப்பு தேவையில்லைதான்.

எனக்கும் தெரிகிறது.

ஆனால் நான் எதிர்பார்த்த ஒரு அன்பிற்கான அசைவை

ஒழுங்கிற்கான அசைவை ஒருநாளாவது காட்டுவான்.

இந்த வீராப்பை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.

இப்போதுவரை அது நடக்கவே இல்லை.


பின்னே? மீசை அரும்பிவிட்டால் பெற்றவர்கள் பேச்சைக்

கேட்கக் கூடாது என்பது இப்போதைய விடலைகளின்

எழுதப்படாத விதியா என்ன?

சிறிது சிறிதாய் நிகழ்ந்த நிகழ்வுகள் அதில் நிறைந்த 

வாக்குவாதங்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு கட்டத்தில்

இனி எப்போதும் என்னிடம் பேசாதே என்பதில் வந்து நின்றுவிட்டது.


சொல்லும்போது இது ஒன்றும் தீர்க்கமான முடிவாய்த் தெரியவில்லை.

வழக்கம்போல் சரியாகும் என்றுதான் நானும் நினைத்திருந்தேன்.

இன்றோடு எட்டுமாதம் முடியப்போகிறது.இப்போதுவரை இருவரும்

பேசிக்கொள்ளவே இல்லை.

எதுவேண்டுமானாலும் எது பேசவேண்டுமானாலும் அவன்

அம்மாவோடு சரி.இரண்டு மூன்று முறை என்னிடம் பேச முயற்சி

செய்தான்.ஆனால் வறட்டு ஈகோ என்னை மௌனமாக இருக்கச் செய்து

இருவரையும் தூரமாக்கிவிட்டது. எங்களுக்கிடையில் பாவம்

அவள்தான் கண்ணீரோடும் நோயோடும் போராடிக்கொண்டிருக்கிறாள்.

அவளது பயமெல்லாம் நாம் இருக்கும்போதே ஒட்டிக்கொள்ள

முடியாமல் இருப்பவர்கள் நாம் இல்லையென்றால் என்ன ஆகும்?

என்பதுதான். அதுவே அவளை நாளுக்குநாள்

வதைத்துக் கொண்டிருக்கிறது.


பேசாமல் ஒரு போன் செய்து அவனிடம் அம்மாவைப் பார்த்துக்கடா.

பத்துநாள் நான் இருக்கமாட்டேன். என்றுமட்டும் சொல்லிவிட்டு

வைத்துவிடலாமா? என்று தோன்றியது.

முடிவெடுப்பதற்குள் ஒரு டூவீலர் எனக்கருகில் நின்றது.


மகனின் நண்பன்.


-அப்பா எங்க கிளம்பிட்டீங்க? வண்டியில ஏறுங்க...


- பரவால்லப்பா... பஸ்ஸடாண்டுதான். நானே போய்க்கிறேன்.


-பேசாம ஏறுங்கப்பா... இந்த வெயில்ல. 

உரிமையோடு பேசினான்.எனக்கும் சரியென்று தோன்ற

ஏறி அமர்ந்தேன்.

ஏழு நிமிடங்களில் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டான்.


-ஊருக்காப்பா?


-ஆமாம்ப்பா...ரொம்ப தேங்ஸ்... கவின்கிட்ட சொல்லிடு.

கொஞ்சம் நேரமே அவன வீட்டுக்குப் போகச் சொல்லு.

அவங்கம்மா தனியா இருப்பா...


-சரிங்கப்பா...நான் சொல்லிடறேன். நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க.

சொல்லி விட்டு வண்டியை உதைத்தவன் சற்று நேரத்தில்

சிட்டாய் மறைந்தான்.

ஹும்...நம்மை ஏற்றிக்கொண்டு வந்ததால் வண்டியை மெதுவாக ஓட்டியிருக்கிறான்.

இந்தப் பசங்களுக்கு கொஞ்சமும் நிதானம் இல்லையே...

சலித்துக்கொண்டே பேருந்தைத் தேடிப்பிடித்து ஏறினேன்


வழக்கம்போல் எனக்குப் பிடித்த சன்னலோர இருக்கை.

அளவாகக் கற்று உள்ளே வரும்படி கதவை நகர்த்திவிட்டு

பேக்கை தலைக்கு மேலே இருக்கும் பகுதியில் வைத்துவிட்டு

அமர்ந்தபோதுதான் நினைவுக்கு வந்தது...

  அடடா... தண்ணீர் வாங்காமல் விட்டுவிட்டோமே...

சரி பேருந்து கிளம்புவதற்குள் வாங்கி வந்துவிடலாம் என்று

எழ எத்தனித்தேன்...


இந்தாங்கப்பா...


முகத்துக்கு நேரே இரண்டு தண்ணீர் பாட்டிலும் பாலிதீனுக்கு மாற்றாக வந்த பையையும் நீட்டிக்கொண்டு நின்றான் கவின்...

இலேசான படபடப்பு வந்து போனது எனக்கு.


-என்ன இது?


- பிடிங்கப்பா...ஆறு அவர் ட்ராவல் பண்ணனும்.

தண்ணியும் இதுல ஸனாக்சும் இருக்குப்பா...

சந்தேக ரேகைகளை அவன் முகத்தில் பார்க்க முடிந்தது.

இந்த வாய்ப்பையும் தவறவிட்டு விடாதே என்று என் உள்ளணர்வு

கதறியது.

வாங்கிக்கொண்டேன்...


-பாத்து போய்ட்டு வாங்கப்பா. நான் கிளம்பறேன். சொல்லிவிட்டு

நகர முயன்றான்.

இத்தனை வயதில் எனக்கே தடுமாற்றம் வரும்போது

 பாவம் சின்னப்பையன் என்ன செய்வான்...


-கவின்?...அழைத்தேன்


-நான் அம்மாவப் பாத்துக்கறேம்ப்பா...நீங்க பயப்படாம

போய்ட்டு வாங்க. என்றான்


உண்மையாகவே நான் அதிர்ந்தேன்.நான் மனதில் நினைத்ததை

எப்படித் தெரிந்துகொண்டான்.? என்னுடையக் கண்களில்

நீர் கோர்ப்பது போன்றொரு உணர்வு.இயல்பாகச் சமாளித்து


-நைட்டு...நீ கொஞ்.... என்னைச் சொல்வதற்கு விடவில்லை.


-நான் ஈவ்னிங்கே வீட்டுக்குப் போயிடுவேம்ப்பா.

நீங்க வர்ற வரைக்கும் ஆறு மணிக்கு வீட்ல இருப்பேன்...

என்றான்...


அடுத்தடுத்து அவன் கொடுத்த அதிர்ச்சிகள் எனக்குப் புதியதாகவும்

வியப்பாகவும் இருந்தது.எனக்கு வேறு எதுவுமே பேசவோ கேட்கவோ தோன்றவில்லை. மிகப்பெரிய சுமையை இறக்கி

வைத்தது போன்று உணர்வு என்னுள் ஓங்கியது.


-சரிப்பா... நீ வீட்டுக்கு கெளம்பு. பாத்து வண்டியில

மெது போ...


-சரிப்பா...


கிளம்பி படிக்கட்டுவரை நடந்தவன் மீண்டும் திரும்பி

அருகில் வந்தான்.அவனை என்ன? என்று கேள்விக்குறியோடு

பார்த்தேன்.

எனக்கருகில் உட்கார்ந்தவன்


-அப்பா...என்றால்


-சொல்லு கவினு...


-ஸாரிப்பா...


அதுவரை வெளிப்படலாமா வேண்டாமா என்று தவித்துக்கொண்டிருந்தக் கண்ணீர் சட்டென்று அவன் கண்களிலிருந்து விழுந்தது.

நானோ இமைகளைச் சற்று வேகமாக இமைத்துக் கண்களில் நீர் நிறைவதை

மறைக்க முயல்கிறேன்.


-அட... பரவால்ல விடு...எதுக்கு அழற.?அதான் சரியாயிடுச்சுல்ல?


-ஸாரிப்பா...


-சரி........ சரி...... மெல்ல அவனை எனது தோள்களில்

சாய்த்துக்கொள்கிறேன்


நான் எதிர்பார்த்த ஒரு அன்பிற்கான ஒழுங்கிற்கான

அசைவு இதுதானென்று தோன்றியது.

இப்போதுவரை ஒரு குழந்தையிடம் வீராப்புச் செய்த என்புத்தியை

தாறுமாறாய்த் திட்டிக்கொண்டிருக்கிறது மனது...

Tags
To Top